கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறந்ததன் பலனை அனைவரும் அறிவோம்: ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன்? - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு கேள்வி

ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு பரபரப்பு கேள்வியை எழுப்பியது.

Update: 2020-05-12 06:49 GMT
மதுரை,

மதுரையை சேர்ந்த போனிபாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன் காரணமாக நோய்த்தொற்று பரவல் சமூக பரவல் நிலையை அடையுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

மது அருந்துதல் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும். எனவே மதுவை பயன்படுத்துவோர் எளிதாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், “மனிதர்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை செய்வது என்பது மக்களுக்கு எதிரானது. எனவே டாஸ்மாக் கடைகளை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு “வீடியோ கான்பரன்சிங்” மூலம் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வீராகதிரவன், “டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றபடாததால் அவற்றை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், மதுவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. மதுப்பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால், கொரோனா எளிதாக தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கை.

மது அருந்தி விட்டு கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களால் அவரின் குடும்பத்தினரும், அவர் வசிக்கும் பகுதியினரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குற்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடித்த பலர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு கர்நாடகம், ஆந்திர மாநிலங்களை ஒப்பிடுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள கேரளா, புதுச்சேரி மாநிலங்களோடுதான் தமிழகத்தை ஒப்பிட வேண்டும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, “டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது, சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீறப்பட்ட இடங்களிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கபசுர குடிநீரையும், மறு கையில் உடலை பாதிக்கும் மதுவையும் வைத்திருக்கிறது. அரசின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளதே” என கருத்து தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

“துஞ்சினா செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்”

என்கிறது, திருக்குறள்.

கடந்த 7-ந்தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும், அங்கு வரிசையில் நின்றவர்கள் பெரும்பாலும் ஏழைகள்தான். அவர்கள் ஊரடங்கை சரிவர கடைபிடிக்கவில்லை என்பதும், அன்றைய தினம் மதுபோதையால் பல குற்றசம்பவங்கள் நடந்துள்ளன என்பதும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகள் மூலம் தெரியவருகிறது.

அரசின் வருவாய்க்காகவும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்கவும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாக தெரிவிப்பதை ஏற்க முடியாது. மாநில அரசின் கொள்கையை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம்.

வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிக அளவில் கூடும் மற்ற இடங்கள் மூடப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது டாஸ்மாக் கடைகளை மட்டும் ஊரடங்கு நேரத்தில் திறந்தது ஏன்?

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறந்ததன் பலன் என்ன? என்பதை அனைவரும் அறிவோம்.

கேரளா, மராட்டியத்தில் மக்களின் நலன்தான் முக்கியம் என்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அதையெல்லாம் நமது மாநில அரசு பரிசீலிக்கவில்லை. மக்களின் உரிமைகள் பாதிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தால், அதை கண்டுகொள்ளாமல் கும்பகர்ணனை போல நீதிமன்றம் தூங்கிக்கொண்டு இருக்காது.

மது அருந்துவது தங்களது தனிப்பட்ட உரிமை என சிலர் கூறினாலும், அடுத்தவர்களை பாதிக்கும் வகையிலான நடவடிக்கையை ஏற்க இயலாது.

இதே கோரிக்கை தொடர்பான வழக்கில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாங்களும் அதே நிலைப்பாட்டையே எடுக்கிறோம்.

எனவே இந்த வழக்கை ஏற்கனவே உள்ள வழக்குடன் இணைப்பது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்