மும்பையில் தவித்த சிவகங்கை, மதுரை, ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் 2 பஸ்களில் வருகை
மும்பைக்கு வேலை, சுற்றுலாவுக்காக சென்ற சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.
காரைக்குடி,
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் மும்பைக்கு வேலை, சுற்றுலாவுக்காக சென்ற சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பலர் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் முன்னாள் எம்.பி செந்தில்நாதன் ஆகியோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கலெக்டர் மற்றும் முன்னாள் எம்.பி. ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் மும்பையில் தவித்த 60-க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு வர தனி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதையடுத்து அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து 2 தனி பஸ்களில் புறப்பட்டு நேற்று காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.