ஊரடங்கு உத்தரவு தளர்வு: சங்கராபுரம், சின்னசேலத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் சங்கராபுரம், சின்ன சேலத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

Update: 2020-05-12 03:02 GMT
சங்கராபுரம்,

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை தமிழக அரசு நேற்று முதல் அமல் படுத்தி உள்ளது. அதன்படி டீ கடைகள், பேக்கரி கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை திறக்கலாம் என்றும். கடைக்கு வரும் மக்களுக்கு சமூக இடைவெளி விட்டு பார்சல்களை மட்டும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், சின்னசேலம் பகுதியில் டீ கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டன. கடைகளில் சமூக இடைவெளிவிட்டு வாங்கி செல்வதற்காக கோடுகள் வரையப்பட்டு உள்ளது. மேலும் டீ மற்றும் உணவு பொருட்கள் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் கடைக்குள் வரமுடியாதபடி கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்புகள் அகற்றம்

பெரிய வர்த்தக நிறுவன கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் நகரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்கள், கார்களில் பொதுமக்கள் முக்கிய சாலைகளில் திரண்டனர். இதனால் ஊரடங்கு நீங்கியதுபோல் சங்கராபுரம், சின்னசேலம் நகரம் காட்சி அளிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சின்னசேலம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சேலம் மெயின் ரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, அந்த வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அதன் பிறகு போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது.

மேலும் செய்திகள்