கைதிக்கு கொரோனா பாதிப்பு: திருநள்ளாறு போலீஸ் நிலையம் மூடல் 31 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் எதிரொலியாக திருநள்ளாறு போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய 31 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-05-12 02:24 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சுரக்குடியைச் சேர்ந்த 35 வயது வாலிபருக்கும், அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருபவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையொட்டி மெக்கானிக் கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து சிறையில் அடைப்பதற்கு முன் அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் நிலையம் மூடல்

தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த இன்ஸ்பெக்டர், அந்த வாலிபரின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என மொத்தம் 14 பேருக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, போலீஸ் நிலையம் மூடப்பட்டது. திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மடவளாகத்தில் உள்ள புறக் காவல் நிலையத்திற்கு போலீஸ் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

31 போலீசாருக்கு பரிசோதனை

திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 31 போலீசாருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட வாலிபர் வசித்து வந்த குடியிருப்பை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பிரதான சாலைகள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து, போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்ட சம்பவம் திருநள்ளாறில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்