சளி மாதிரி சேகரிக்கப்படும் கருவிகள் பற்றாக்குறை: ஆரல்வாய்மொழியில் கொரோனா பரிசோதனை 4 மணி நேரம் நிறுத்தம்
சளி மாதிரி சேகரிக்கப்படும் கருவிகள் தீர்ந்து போனதால் ஆரல்வாய்மொழி கல்லூரியில் கொரோனா பரிசோதனை பணி 4 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
ஆரல்வாய்மொழி,
சளி மாதிரி சேகரிக்கப்படும் கருவிகள் தீர்ந்து போனதால் ஆரல்வாய்மொழி கல்லூரியில் கொரோனா பரிசோதனை பணி 4 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
ஆரல்வாய்மொழி கல்லூரி மையம்
சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குமரிக்கு படையெடுத்த வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக அண்ணா கல்லூரி மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சளி மாதிரி சேகரிப்பதற்கான கருவிகள் இல்லை.
கொரோனா பரிசோதனை பணி நிறுத்தம்
இதனால் அந்த நபர்களிடம் சளி மாதிரி சேகரிக்கப்படவில்லை. கருவிகள் வந்தவுடன் சளி மாதிரி சேகரிக்கப்படும் என்று மருத்துவ பணியாளர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரிசோதனை பணி நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வகையில் சுமார் 4 மணி நேரமாக கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கும் பணி நடைபெறவில்லை. கொரோனா பரிசோதனை கருவிகள் தட்டுப்பாட்டால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கேயே வெகுநேரமாக காத்திருந்தனர். இதனால் சின்ன குழந்தைகள், பெரியவர்கள் ஏராளமானோர் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் காலை 8 மணிக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கருவிகள் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து 4 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் சளி மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியது. பரிசோதனைக்கு பிறகு கன்னியாகுமரி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கருவிகள் தீர்ந்து போனதால் ஏற்பட்ட பரபரப்பு, சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது. நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை (அதாவது 24 மணி நேரத்தில்) வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 90 வாகனங்களில் 252 பேர் குமரிக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு கன்னியாகுமரி முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆஸ்டின் எம்.எல்.ஏ.
இதனை அறிந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. அந்த மையத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர், கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்? என்று மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.