ஊட்டியில் தங்கியிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு பயணம்

ஊட்டியில் தங்கியிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றனர்.

Update: 2020-05-11 23:00 GMT
ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது. நீலகிரியில் வருவாய்த்துறையினர் சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களிடம் விவரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்பினர்.

ஆனால் அரசிடம் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அனுப்புவது குறித்த உத்தரவு இதுவரை வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களாக ஊட்டியில் சிக்கி தவித்த ராஜஸ்தான், பீகார் மாநிலத்தை சேர்ந்த 64 பேர் சொந்த ஊருக்கு தனி பஸ்சில் செல்ல தமிழக அரசிடம் இ-பாஸ் பெற விண்ணப்பித்தனர். அதனை தொடர்ந்து அவர்களது ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். அவர்கள் தனித்தனியாக இ-பாஸ் பெற்றனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து 64 பேர் ராஜஸ்தானுக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அதில் வெளிமாநில தொழிலாளர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் இருந்தனர்.

மேலும் செய்திகள்