மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஊழியர்களுடன் 25 ஆயிரம் நிறுவனங்கள் செயல்பட தொடங்கின - மந்திரி சுபாஷ் தேசாய் தகவல்
மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஊழியர்களுடன் 25 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கின என மந்திரி சுபாஷ் தேசாய் கூறினார்.
மும்பை,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கவில்லை. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மராட்டிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தொழில்துறை பிரதிநிதிகளுடன், மந்திரி சுபாஷ் தேசாய் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டியத்தில் சுமார் 25 ஆயிரம் நிறுவனங்கள் மீண்டும் தங்கள் பணியை தொடங்கியுள்ளன. இதில் பணிபுரியும் 6 லட்சம் பேர் வேலைக்கு வந்துள்ளனர். குறிப்பாக மேற்கு மராட்டியத்தில் மட்டும் 9 ஆயிரத்து 147 தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 5 ஆயிரத்து 774 நிறுவனங்கள் ஏற்கனவே பணியை தொடங்கி விட்டன.
மும்பை, புனே
இருப்பினும் மும்பை, தானே, புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதிகளில் தொழிற்சாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஏனெனில் இந்தப் பகுதியில் வைரஸ் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளும் அதிக அளவில் உள்ளன. இங்கு மீண்டும் பணிகளை தொடங்குவதன் மூலம் ஆபத்தை எதிர்கொள்ள அரசு தயாராக இல்லை.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநிலத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.