பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் வலியுறுத்தல்
தமிழக அரசு இன்று முதல் தளர்வுகளை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர்,
தமிழக அரசு இன்று முதல் ஊரடங்கு தளர்வுகளை அதிகரித்துள்ளது. 34 வகையான கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதியில் உள்ள குளிரூட்டப்படாத ஜவுளி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நகர் பகுதிகளில் ஜவுளி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீக்கடைகளில் அமர்ந்தோ, நின்று கொண்டோ டீ அருந்த அனுமதி இல்லை என்றும் இந்த விதிமுறையை மீறும் டீக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த கடைகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அறிவித்தபடி டீக்கடைகளில் பார்சல்கள் வழங்குவது, நடைமுறை சாத்தியம் இல்லை. இந்த விதிமுறையுடன் கூடிய தளர்வால் எதிர்வினை பலன்கள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை தான் உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற பொது நிபந்தனையை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே தமிழக அரசு நடைமுறை சாத்தியம் உள்ள விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவிக்க வேண்டியது அவசியம் ஆகும். விருதுநகர் மாவட்டத்தில் இன்று அமலுக்கு வரும் தளர்வுகள் குறித்து கலெக்டர் கண்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் உள்ளதால் அரசு அறிவித்துள்ள தளர்வுகளை விதிமுறைகளுடன் அவசியம் கடைபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த விதிமுறை சாத்தியப்படும் அல்லது சாத்தியம் இல்லை என்று பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சுயகட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். நகர்ப்புறங்களில் ஜவுளி கடைகளுக்கு தடை தொடர்கிறது. அரசு அறிவித்துள்ள 34 கடைகள் மட்டுமே மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட நேரம் வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் ஊரடங்கு உத்தரவுப்படி அமலில் உள்ள உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.