கன்னியாகுமரி முகாமில் இருந்து வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 300 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததால் நடவடிக்கை

கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததால், கன்னியாகுமரி முகாமில் இருந்து வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 300 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2020-05-11 06:55 GMT
கன்னியாகுமரி, 

கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததால், கன்னியாகுமரி முகாமில் இருந்து வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 300 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளி மாவட்ட மக்கள் முகாம்

சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் நபர்கள் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படுவதும், தொடர்ந்து சுகாதாரத்துறையினர் சளி மாதிரியை சேகரித்த பிறகு அன்றைய தினமே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை நடைமுறையை பின்பற்றி வந்தனர்.

பின்னர் இந்த முறையை மாற்றி, அதாவது, கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் வரை வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தனிமை முகாமில் தங்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகளை முகாமாக மாற்றி உள்ளனர்.

300 பேர் அனுப்பி வைப்பு

அந்த வகையில் கன்னியாகுமரி முகாம்களில் 300-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வழங்கி வந்தனர். இந்த நிலையில் 300-க்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன.

இதில் யாருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, மேலும் வெளி மாவட்ட மக்கள் வந்த வண்ணம் இருப்பதால் நேற்று மாலை வரை முகாம்களில் 280 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 நாட்களில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு சொந்தமான வாகனங்கள் கன்னியாகுமரியில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும்பணியும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்