கரூரில் டேங்கர் லாரி மீது சுற்றுலா பஸ் மோதல் 20 பேர் காயம்
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 பேர் ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பெங்களூருவில் சிக்கி தவித்தனர்.
கரூர்,
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஐ.டி.நிறுவனம் மற்றும் நர்சிங் படித்து வரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 பேர் ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பெங்களூருவில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து அவர்கள் முறையான இ-பாஸ் பெற்று கொண்டு, சுற்றுலா பஸ் ஒன்றை ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அந்த பஸ் பெங்களூருவில் இருந்து 24 பேருடன் கேரள மாநிலம் கோட்டயத்திற்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சகீர் (வயது 35) ஓட்டி வந்தார்.
அந்த பஸ் நேற்று காலை கரூர் ராம் நகர் பிரிவு அருகே மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்ணீர் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது, சுற்றுலா பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்தது. இதில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சகீர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பஸ்சின் உள்ளே சிக்கி தவித்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த பஸ் டிரைவர் சகீர் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கரூர் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.