கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் கார்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் கார்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2020-05-11 03:14 GMT
ஓசூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், திருமணம், துக்க நிகழ்வுகள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள், தங்கள் மாநிலத்தில் இருந்து இ-பாஸ் பெற்றுக்கொண்டு பிற மாநிலங்களுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏராளமானோர் தங்கள் பகுதிகளில் இருந்து இ-பாஸ் பெற்றுக்கொண்டு பிற மாநிலங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வருகின்றனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இ-பாஸ் பெற்று அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு சென்று வருகின்றனர்.

அனுமதி மறுப்பு

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக நேற்று காலை முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் நுழையும் அனைத்து கார்களையும், தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் சோதனைச்சாவடி அமைத்து அந்த மாநில போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

இதனால் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கார்களில் சென்றவர்கள் மாநில எல்லையில் நீண்ட நேரம் காத்திருந்து செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடக மாநில அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மீறி செல்பவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

அரசு தலையிட கோரிக்கை

மாநில எல்லையில் கர்நாடகாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் கார் பயணிகள், வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்து அங்கேயே நின்றனர். அதே சமயம், கர்நாடக மாநிலத்தை தாண்டி, அதன் வழியாக ஆந்திரா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கார், வேன்களில் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு ஏன் தங்களுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும்? மாநில எல்லை வரை வந்து கால விரயம் மற்றும் பணம் இழப்பு ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட கர்நாடகத்தை சேர்ந்த கார் பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதால், தமிழகத்தில் இருந்து சென்ற ஏராளமான கார்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே குவிந்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.

மேலும் செய்திகள்