வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது, கொரோனாவை பரவாமல் தடுப்பது, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் கன்னடர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 நாட்கள் தனிமை முகாம்
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். சொந்த ஊர் திரும்ப விரும்புபவர்கள் ஆன்லைனில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவிப்பவர்களை மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் அவர்கள் தகவல்களை பதிவு செய்யும்போது, வருகை தரும் இடம் மற்றும் தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இங்கு இருக்கும் தனிமைப்படுத்தும் வசதிகளின் அடிப்படையில் அவர்கள் படிப்படியாக அனுமதிக்கப்படுவார்கள்.
கர்நாடகம் திரும்புபவர்கள், நேரடியாக அவர்களின் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாது. அவர்கள் 14 நாட்கள் தனிமை முகாமில் கட்டாயம் இருக்க வேண்டும். தனிமை முகாமில் இருக்க தயாராக இருப்பவர்கள் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ரெயில்களில் கர்நாடகம் வருபவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்.
கொரோனா பரிசோதனை
அவர்கள் இருக்கும் மாநிலங்களில் கொரோனா பரிசோதனை நடத்தி இருந்தாலும், கர்நாடகத்திற்குள் வரும்போது, அத்தனை பேரும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஒருவேளை பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தால், அத்தகையவர்களின் உடல் கர்நாடகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்.
எங்கு இறக்கிறார்களோ அங்கேயே இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். அதேபோல் கர்நாடகத்திற்குள் இருக்கும் பிற மாநிலத்தினர் இங்கு இறந்தால், அவர்களின் உடலுக்கு இங்கேயே இறுதிச் சடங்கு செய்யப்படும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.