வாலாஜா அருகே கிணற்றுக்குள் லாரி பாய்ந்து கல்லூரி மாணவர் பலி

வாலாஜா அருகே கிணற்றுக்குள் லாரி பாய்ந்து கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2020-05-10 23:32 GMT
வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் சாலையையொட்டி உள்ளது. நிலத்தில் 60 அடி ஆழ கிணறும் உள்ளது. நேற்று மாலை டிப்பர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. தங்கவேலுவின் விவசாய நிலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கிணற்றுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்த வாலாஜா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த லாரியில் வன்னிவேடு பகுதியை சேர்ந்த கோபி (வயது 23), அஜித்குமார் (21), சிவக்குமார் (17), நவீன் (18) ஆகிய 4 பேர் வந்துள்ளனர். இதில் கோபி, அஜித்குமார், சிவக்குமார் ஆகிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றொருவரான நவீன் லாரிக்குள்ளேயே இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து லாரியின் கதவை உடைத்து அவரை மீட்புக்குழுவினர் மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் கிணற்றுக்குள் பாய்ந்து கிடந்த லாரியும் மீட்கப்பட்டது.

விசாரணையில் இறந்து கிடந்த நவீன் ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்