28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தது: தனிமைப்படுத்தப்பட்ட 4 பகுதிகளில் ‘சீல்’ அகற்றம்
28 நாட்கள் கண்காணிப்பு முடிந்ததால், நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த ‘சீல்’ அகற்றப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் 3 பேர், குன்னூர் ராஜாஜி நகரில் 2 பேர், கோத்தகிரி கடைவீதி மற்றும் எஸ்.கைகாட்டியில் 4 பேர் என 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. அப்பகுதிகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளதா என்று 440 குழுவினர் ஆய்வு செய்தனர். காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டதால் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு காலம் முடிந்ததால், மேற்கண்ட 4 பகுதிகளிலும் ‘சீல்’ அகற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறது. அதிக மக்கள்தொகை கொண்ட ஊட்டி காந்தலில் அனுமதிக்கப்பட்ட காய்கறி, மளிகை, செல்போன், பால், மருந்தகங்கள் திறக்கப்பட்டன. கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள், கட்டங்கள் வரையப்பட்டு இருந்தது. முகக்கவசம் அணியாமல் வந்தால் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படாது என்று ஒரு மருந்தகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
‘சீல்’ அகற்றப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக வீடுகளுக்குள் முடங்கி இருந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தினர். மூடப்பட்ட சாலைகளில் தடுப்புகள் அகற்றப்பட்டன. வாகனம் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இருப்பினும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு காந்தலில் வசித்து வந்த 150 தூய்மை பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது சீல் அகற்றப்பட்டு உள்ளதால், நேற்று முன்தினம் இரவு தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.