கத்தியால் தொழிலாளியை வெட்டிய தந்தை- 2 மகன்கள் கைது

பெரியகுளம் அருகே தொழிலாளியை கத்தியால் வெட்டிய தந்தை- 2 மகன்கள் கைது

Update: 2020-05-10 06:13 GMT
பெரியகுளம், 

பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருடைய அண்ணன் சசிபிரபு (25). இருவரும் அப்பகுதியில் உள்ள சேது என்பவர் வீட்டு அருகே உள்ள காலியிடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தினர். இதைப்பார்த்த சேது அவர்களை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

அப்போது அங்கு வந்த சேதுவின் மகன்கள் முத்துச்சாமி (21), யோகேஷ் (31) ஆகியோர் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டவர்களை தாக்கினர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சேதுவும் அவருடைய மகன்களும் சேர்ந்து மஞ்சுநாதனின் கைகளில் கத்தியால் வெட்டினர். 

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து மஞ்சுநாதன் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேது மற்றும் அவருடைய 2 மகன்களையும் கைது செய்தனர். அதேபோல் தன்னையும், தனது மகன்களையும் தாக்கியதாக சேது கொடுத்த புகாரின் பேரில் மஞ்சுநாதன், சசிபிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்