சிறுமியுடன் வாட்ஸ்-அப்பில் பேசியதாக தகராறு: இரும்பு கம்பியால் டிரைவர் அடித்துக்கொலை 6 பேர் கைது

மன்னார்குடி அருகே சிறுமியுடன் வாட்ஸ் அப்பில் பேசியதாக ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் டிரைவரை அடித்துக்கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-09 23:41 GMT
மன்னார்குடி, 

மன்னார்குடி அருகே சிறுமியுடன் வாட்ஸ் அப்பில் பேசியதாக ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் டிரைவரை அடித்துக்கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு கம்பியால் தாக்குதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி உள்ளூர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் நவீன்(வயது 20). டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர், 14 வயதான சிறுமி ஒருவருடன் செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் பேசி வந்ததாக தெரிகிறது. இதனையறிந்த நவீனின் மனைவி அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரை திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நவீனை சிறுமியின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த முருகேசன்(45), முருகானந்தம்(38), பொன்னுசாமி(55), ராஜா(28), சந்திரன்(62), சுதாகர்(40) ஆகிய 6 பேரும் வழிமறித்து அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.

பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்த அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன், சுதாகர், முருகேசன், முருகானந்தம், பொன்னுசாமி, ராஜா ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்