வைகையில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்; ‘அழகரை காணாதது வேதனை’ -பக்தர்கள் கருத்து
வைகையில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் முடிக்காணிக்கை செலுத்தி பலர் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் அழகரை நேற்று காண முடியாமல் போனது வேதனை அளிப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை சித்திரை திருவிழா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி காட்சி அளிப்பது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவார்கள்.
அப்படிப்பட்ட சித்திரை திருவிழா இந்தாண்டு கொரோனா வைரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் பல லட்சம் மக்கள் மத்தியில் மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று நடக்க இருந்தது. ஆனால் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் அழகர் மலையில் இருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படவில்லை. மக்களை தேடி வந்து அருள்பாலிக்கும் கள்ளழகரை இந்த ஆண்டு நேரில் தரிசிக்க முடியாததால் பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கள்ளழகர் வருகையையொட்டி குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்த இருந்தவர்கள் பலர், மதுரை வைகை ஆற்றில் அழகரை வேண்டி முடிக்காணிக்கை செலுத்தியதையும் காண முடிந்தது.
இதுகுறித்து கள்ளழகர் பக்தர்கள் வர்ணிப்பாளர் மகாசபையின் தலைவர் சிவராமகிருஷ்ணன் கூறியதாவது:- அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி 24 கிலோ மீட்டர் தூரம் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி பல லட்சம் பேருக்கு காட்சி அளிப்பார். கள்ளழகரின் அழகையும், அவரது வரலாறு, வருகை குறித்து பாட்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.1965-ம் ஆண்டு இந்த சபை தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு வரை கள்ளழகருடன் சென்று வந்தோம். இந்த நாளுக்காகத்தான் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்போம். அப்போது கள்ளழகரை காண வரும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர், பிரசாதம் போன்றவை வழங்குவோம். ஆனால் இந்தாண்டு கொரோனா நோயால் அழகர் மதுரைக்கு வரவில்லை. இது எங்களை பெரிதும் பாதித்து உள்ளது. பல ஆண்டுகளாக அழகருக்கு செய்த இந்த சேவை இந்தாண்டு தடைபட்டுவிட்டது என்பதை நினைத்து வருந்துகிறோம்.
கள்ளழகருக்கு தீப்பந்த சேவை செய்யும் பக்தர் மோகன்:-
இந்தாண்டு கள்ளழகர் மதுரையில் எழுந்தருளாமல் போனதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் பாரம்பரியமாக இந்த தீப்பந்த சேவையை கள்ளழகருக்கு செய்து வருகிறோம். வெளிச்சம் இல்லாத காலத்தில் கள்ளழகரை காண வரும் பக்தர்கள் அழகரை தரிசிக்கவும், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்து கொள்ளவும் திருவிழா நடக்கும் இடம் ஜோதி பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த சேவையை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். எனக்கு தெரிந்து நான் 4-வது தலைமுறையாக இந்த சேவையை செய்து வருகிறேன். அப்படி இறைவனுக்கு செய்யும் இந்த மிகப்பெரிய சேவை கொரோனா வைரசால் நின்று விட்டது என்பதை நினைக்கும் போது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கள்ளழகர் கிளம்பி மதுரை வந்து, மீண்டும் திரும்பி செல்லும் வரை விரதம் இருந்து அவருக்கு இந்த சேவையை செய்வோம்.
மதுரை புதூர் சங்கர்நகரை சேர்ந்த ராஜூ:-
கள்ளழகர் மதுரைக்கு வரும்போது எங்கள் பகுதியான மூன்றுமாவடியில்தான் அவருக்கு எதிர்சேவை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவை காண எனது உறவினர்கள் எல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அப்போது எங்கள் பகுதி முழுவதும் “வாராரு, வாராரு, அழகர் வாராரு” என்ற பாடல் விண்ணை பிளக்கும். ஆனால் இந்தாண்டு திருவிழா நடைபெறாமல் தடைபட்டு நிசப்தமான நிலை காணப்படுகிறது. எங்களை தேடி வந்து அருள்பாலிக்கும் கள்ளழகரை காணாது எங்கள் மனம் மிகவும் வேதனையில் உள்ளது. இது தவிர அழகர் வரும் போது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் போன்றவற்றை வழங்குவோம். ஆனால் இந்தாண்டு அதையும் செய்ய முடியாமல் போனது, ஏதோ ஒன்றை இழந்தது போல் உள்ளது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் நேற்று தனது மகனுக்கு முடிக்காணிக்கை செலுத்திய செல்லூரை சேர்ந்த பெண் காயத்ரி:-
கள்ளழகர் அருளால் எனக்கு திருமணம் நடந்து, ஆண்குழந்தை உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது என் குழந்தைக்கு முடியெடுப்பதாக வேண்டிக் கொண்டேன். ஆனால் இந்தாண்டு கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளவில்லை. ஆனால் நான் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும் வண்ணம் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தி விட்டேன்.
மதுரை தெற்குவாசலை சேர்ந்த பெண் அபிராமி சரவணன்:-
ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, கள்ளழகர் கோவில் சித்திரை விழாவை தவறாமல் பார்த்து விடுவேன். ஆனால் இந்தாண்டு இரண்டு திருவிழாவையும் பார்காமல் இருப்பது மக்கள் ஏதோ தவறு செய்து விட்டார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை காண முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை மிகவும் வாட்டியது. இருந்தாலும் நான் கணவருடன் கள்ளழகர் எழுந்தருளும் வைகை ஆற்றுக்கு சென்று கும்பிட்டுவிட்டுத்தான் வந்தேன்.