ஊரடங்கு தளர்வால் நெல்லை கடை வீதிகளில் 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டியதால் பரபரப்பு

ஊரடங்கு தளர்வால் நெல்லையில் நேற்று 2-வது நாளாக கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-06 01:51 GMT
நெல்லை, 

ஊரடங்கு தளர்வால் நெல்லையில் நேற்று 2-வது நாளாக கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு தளர்வு

கொரோனா பரவலை தடுக்க வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் நெல்லை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்பான ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பெரிய ஜவுளி கடைகள், தொழில் நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படவில்லை.

நேற்று 2-வது நாளாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து கடைகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் வழக்கம் போல் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றார்கள். இதனால் டவுன் கடைவீதிகள், சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி உள்ளிட்ட கடைவீதிகள் முக்கிய சந்திப்புகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்றன. கட்டுமான தொழில் உள்பட பல்வேறு தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக பணியில் ஈடுபட்டனர்.

கடைகள் அடைப்பு

பாளையங்கோட்டையில் உள்ள பெரிய வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஊரடங்கு தளர்வு என்று கூறி திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை குறிப்பிட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அவர்கள், ‘குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பெரிய கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. எனவே தடையை மீறி திறந்தால் உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும்‘ என்று எச்சரித்தனர்.

இதையடுத்து அந்தந்த கடை நிர்வாகமே கடைகளை மூட நடவடிக்கை எடுத்தனர். ஊழியர்கள் கடைகளை பூட்டியதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்