தாராவியில் 196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்

தாராவியில் 196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

Update: 2020-05-05 23:00 GMT
மும்பை, 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் ஆட்கொல்லி கொரோனா காட்டு தீ போல பரவி வருகிறது. 

நேற்று மேலும் 33 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக 90 அடிசாலை பகுதியை சேர்ந்த 9 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

மற்றவர்கள் அம்பேத்கர்சால், கும்பர்வாடா, ராஜூவ்காந்திநகர், கல்யாணவாடி, இந்திராநகர், லேபர்கேம்ப், டாடா காலனி, அபுபக்கர் சால், விஜய் நகர், முகுந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 665 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.

196 குணமாகினர்

தாராவியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறியுடன் யாரும் உள்ளார்களா என சோதனை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் இதுவரை 83 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா அறிகுறி சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 380 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர தாராவியில் இதுவரை 196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து இருப்பது அப்பகுதி மக்கள் இடையே சற்று ஆறுதலை தந்து உள்ளது.

மேலும் செய்திகள்