பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த மணல் லாரியை கடத்தி சென்ற 4 பேர் கைது
பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த மணல் லாரியை கடத்தி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த மணல் லாரியை கடத்தி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
தனிப்படை அமைப்பு
பட்டுக்கோட்டை அருகே உள்ள கோட்டாக்குடி ஆற்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருட்டு மணல் அள்ளி வந்த லாரியை பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் தலைமையிலான குழுவினர் பிடிக்க முயன்றனர். அப்போது லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியை பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 12.2.2020 அன்று இரவு தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை அலுவலக கேட் பூட்டை உடைத்து ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பெரியசாமி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு லாரியை கடத்தி சென்றவர்களை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்தநிலையில் லாரியை கடத்தி சென்றவர்கள் சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராம பகுதியில் பதுங்கி இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த முத்து சரவணன் (வயது36), சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த பூமிநாதன் (29), பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த விஜய் (24), அஜீத் (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த மணல் லாரியையும் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டைக்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.