மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று வெளியூரிலிருந்து வந்த 2,132 பேர் 21 இடங்களில் தங்க வைப்பு கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்த 2,132 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் 21 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-05 05:55 GMT
திருவண்ணாமலை,

கொரோனா தடுப்புக்காக நாடு முழுவதும் வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை பல்வேறு வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள கடைகள் மேற்கண்ட நேரங்களின் அடிப்படையில் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் கடைகள் ஹார்டுவேர், உணவகங்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சூப்பர் மார்க்கெட், பழுது பார்க்கும் கடைகள், தையல் கடைகள், பேன்சி கடைகள், புத்தகம் மற்றும் ஸ்டேசனரி கடைகள், இரு மற்றும் நான்கு சக்கர விற்பனை கடைகள் உட்பட்ட தனி கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

டீக்கடைகளுக்கு தடை

இதில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள், டீப்கடை நடத்துவதற்கு தடை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்திருப்பதோடு ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே சென்று வழங்கவும், நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனை, இறைச்சி விற்பனை புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கடைகள் செயல்படும் இடங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது. கடையில் உள்ள விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கை சுத்திகரிப்பான் பயன்படுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு முடியும் வரை கடைக்கு சீல் வைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். இப்பகுதிகளில் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

21 இடங்களில் தனிமை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களை கண்காணிக்க கிராம அளிவலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மாலை வரை 2 ஆயிரத்து 132 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மாவட்டத்தில் 21 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்படாதவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

சிவப்பு மண்டலமாக...

இதுவரை 350 பேர்களில் பரிசோதனை முடிவுகள் வரப்பெற்று உள்ளது. இதில் 10 பேர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்து உள்ளது. இதில் 10 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்கள். தொடர்ந்து 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரஞ்ச் மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அத்தியாவசி தேவைகளுக்காக வாகனங்களில் வெளியில் வரும் பொதுமக்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் தவிர்த்து தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்மோகன், துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகிணி உடனிருந்தார்.

மேலும் செய்திகள்