தொழிலாளர்களை எந்த அரசும் புறக்கணிக்கக்கூடாது - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி

தொழிலாளர்களை எந்த அரசும் புறக்கணிக்கக்கூடாது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2020-05-05 00:10 GMT
பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசினேன். அவர்களுக்கு உதவி செய்தேன். இதை மந்திரி ஆர்.அசோக் விமர்சித்துள்ளார். நான் அவரை கேட்டு மெஜஸ்டிக்கிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் யார்?. நான் உள்பட காங்கிரஸ் கட்சியினர் அவரிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை.

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக நான் கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது எனது கடமை. பா.ஜனதாவில் உள்கட்சி பிரச்சினை இருப்பதால் ஆர்.அசோக் அவ்வாறு பேசுகிறார். மக்கள் தான் எங்களுக்கு கடவுள். மந்திரிகள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தொழிலாளர்களை எந்த அரசும் புறக்கணிக்கக்கூடாது.

தொழிலாளர்களை மதிக்க வேண்டும்

கர்நாடகம் உள்பட இந்த நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் பணக்காரர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களை மதிக்க வேண்டும். தொழிலாளர்களை இந்த அரசு எப்படி நடத்தியது. தொழிலாளர்கள் மெஜஸ்டிக்கில் சாலையில் விழுந்து கிடந்தனர். உங்களுக்கு கொஞ்சமாவது கருணை, இதயம் இருக்கிறதா?.

தொழிலாளர்கள் பஸ்களில் பயணம் செய்ய கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனரிடம் ரூ.1 கோடி காசோலை வழங்க முடிவு செய்து அவரிடம் பேசினோம். அவர் இந்த காசோலையை வாங்க முன்வரவில்லை. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்குமாறு அந்த அதிகாரி கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் திட்டிய பிறகு லட்சுமண் சவதி, ஆர்.அசோக் பஸ் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா, தொழிலாளர்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். இது இந்த மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

மேலும் செய்திகள்