ரெயில்களில் சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது - மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

ரெயில்களில் சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-05-04 23:30 GMT
மும்பை, 

கொரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. மராட்டியத்தில் நாசிக் மற்றும் பிவண்டியில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்தநிலையில், ரெயில்களில் சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வருமானம் இல்லை

மராட்டியத்தில் ஏறக்குறைய 5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு 40 நாட்களாக உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. தற்போதையை நிலைமைய கருத்தில் கொண்டு அவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்புகின்றனர்.

அவர்களுக்கு கடந்த சில வாரங்களாக எந்த வருமானமும் இல்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் அவர்களிடம் இருந்து ரெயில் பயணத்திற்கு மத்திய அரசு கட்டணம் வசூலிக்க கூடாது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களுக்கு ரெயில் டிக்கெட் கட்டணத்தை ஏற்க முன் வந்துள்ளனர்.

மும்பை, தானே மற்றும் புனே நகரங்களில் இருந்து ரெயில்களில் வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றி செல்ல முடிவு செய்தால் அதிகளவிலான பயணிகளை கையாள தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்