ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் எதிரொலி: சமூக இடைவெளியை மறந்து வீதி உலா வந்த மக்கள்
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் மக்கள் சமூக இடைவெளி என்பதை மறந்து வீதிகளில் சுய கட்டுப்பாடு இன்றி உலா வந்தனர்.
மன்னார்குடி,
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் மக்கள் சமூக இடைவெளி என்பதை மறந்து வீதிகளில் சுய கட்டுப்பாடு இன்றி உலா வந்தனர்.
சமூக இடைவெளி
கொரோனா எனும் கொடிய நோய்க்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், முக கவசம் அணியுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அரசு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கை அமல்படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கை தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி ஊரடங்கு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு மே 17-ந் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள்
3-வது முறையாக அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக் கப்பட்டன. இதன் எதிரொலி யாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல கடைகள் திறக்கப்பட்டன. இதை அறிந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்தனர். வங்கிகளின் வாசலிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு நின்றதை காண முடிந்தது.
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளி என்பதை மறந்து மக்கள் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக உலா வந்தனர். இதில் பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை.
திருத்துறைப்பூண்டி
அதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள கடைகள், வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மேலவீதி, காசுகடைதெரு உள்ளிட்ட இடங் களில் கூடி நின்ற மக்கள் சமூக இடைவெளி என்றால் என்னவென்றே தெரியாதது போல நடமாடினர். திறக்கப்பட்ட கடைகளில் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.