ஊரடங்கால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு

ஊரடங்கால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணையாளர்களுக்கு இதுவரை ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் கூறினார்.

Update: 2020-05-04 23:15 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை குறைந்தது. தற்போது முட்டை விற்பனை அதிகரித்து வருவதால், அதன் விலையும் உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் கேரளாவிற்கு அதிக அளவில் முட்டைகள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. முட்டை லோடுகளை இறக்கி விட்டு வரும் லாரி டிரைவர்களை சோதனைச்சாவடியில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். டிரைவர்களை கொரோனா பரிசோதனை என்ற பெயரில் 2 நாட்கள் முகாமில் தங்க வைப்பதால், மீண்டும் பிற மாநிலங்களுக்கு செல்ல டிரைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

டிரைவர்களுக்கு தொற்று இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும். ஏ.கே.பி. சின்ராஜ் எம்.பி. மூலம் நாங்களும் மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளோம்.

இதேபோல் கோழிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு லாரிகளை வெளிமாநிலம் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

ஏற்கனவே கோழிகள் மூலம் கொரோனா நோய் தொற்று பரவுவதாக வந்த வதந்திகளால் முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது விற்பனை சீராக உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் இதுவரை ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் நல்லதம்பி, கவுரவ தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, துணை தலைவர் நாகராஜன், துணை செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்