தூத்துக்குடியில் திறக்கப்பட்ட கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு
தூத்துக்குடியில் திறக்கப்பட்ட கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இதனால் மாவட்டத்தில் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் மத்திய அரசு 3-வது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கை வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருக்கிறது.
கடைகள் திறப்பு
அதன்படி நேற்று ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது. தூத்துக்குடியில் நேற்று காலை முதல் சிறிய ஜவுளிக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், ஸ்டேஷனரி கடைகள், ஜெராக்ஸ் கடைகள், பெட்டிக்கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. சுமார் 1 மணி நேரம் வியாபாரிகள் கடையை திறந்து வியாபாரம் செய்தனர்.
மேலும் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் வைத்து இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. அனைத்து சிக்னல்களும் வழக்கம் போல் செயல்பட்டன. அனைத்து சாலைகளிலும் லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் இயங்கின. சிக்னல்களில் நூற்றுக்கணக் கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மூடப்பட்டன
இதனால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி இருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு, டபிள்யூ.ஜி.சி. ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திறந்து இருந்த கடைகளை அடைக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து கடைகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. செல்போன் கடைகள், ஹார்டுவேர்ஸ், உணவகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன. மக்களும் ஆர்வமாக பொருட்களை வாங்கி சென்றனர்.
வாகன தணிக்கை தீவிரம்
மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் சோதனைச்சாவடிகள் தளர்த்தப்பட்டு இருந்தன. வாகன தணிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் மாவட்டத்தின் எல்லைகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.