திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு கிருமி நாசினி தினமும் காலை, மாலை தெளிக்க அறிவுறுத்தல்
திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, தினமும் காலை, மாலை இருவேளையும் தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, தினமும் காலை, மாலை இருவேளையும் தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணி
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இது தவிர, சோதனை சாவடிகளிலும், தெருக்களில் தேவையின்றி சுற்றுபவர்களை அப்புறப்படுத்துவதற்காக ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார் கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வகையில், அவர் களுக்கு முககவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த போலீஸ் நிலையங்களின் முன்பு மேஜை போட்டு வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ஏதேனும் புகார்கள் வந்தால் போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்காமல் வெளியிலேயே அது குறித்து விசாரித்து மேல்நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருமிநாசினி
இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் போலீசார் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மாநகருக்கு 100 லிட்டர் கிருமிநாசினி மருந்தும், அதை தெளிப்பதற்கான 20 எந்திரங்களும் வந்துள்ளன. இதில் மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் தலா 5 லிட்டர் கிருமி நாசினி வழங்கப்பட்டு, அதனுடன் எந்திரமும்(ஸ்பிரேயர்) வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை போலீஸ் நிலையத்தில் பணியில் உள்ள போலீசாரே தினமும் காலை, மாலை என இருவேளை களிலும் போலீஸ் நிலைய வளாகம், கதவு கைப்பிடிகள், அறைகள், பணிக்கு வருபவர்களின் வாகனங்கள் என அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும். திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், பாலக்கரை, உறையூர், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை என அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.