அடிமாட்டு விலைக்கு சில காய்கறிகள் விற்பனை: வடசேரி உழவர் சந்தை குளிர்பதன கிடங்கை நாடும் விவசாயிகள்

அடிமாட்டு விலைக்கு சில காய்கறிகள் விலை போவதால், வடசேரி உழவர்சந்தை குளிர்பதன கிடங்கை விவசாயிகள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

Update: 2020-05-04 01:08 GMT
ராஜாக்கமங்கலம்,

அடிமாட்டு விலைக்கு சில காய்கறிகள் விலை போவதால், வடசேரி உழவர்சந்தை குளிர்பதன கிடங்கை விவசாயிகள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். சுமார் 6 டன் தடியங்காய்கள் அங்கு சேமிக்கப்பட்டன.

விலை வீழ்ச்சி

கொரோனா ஊரடங்கால் விவசாய விளை பொருட்களுக்கும் விலை இல்லாமல் போனது. மேலும், சில காய்கறிகள் அடிமாட்டு விலைக்கே விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர்.

இந்த சூழலில் குளிர்பதன கிடங்குகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில் வேளாண் அறிவியல் நிலையமும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையும் இணைந்து விவசாயிகளை நேரடியாக சந்தித்து காய்கறிகளை வடசேரி உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

குளிர்பதன கிடங்கில்...

இதற்கிடையே ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் கிராமத்தில் பூசணி, தடியங்காய், மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. இதில் தடியங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.3-க்கு விலை போனது. இந்த நிலையில் குமாரபுரம் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்ற விவசாயி, தனது 2 ஏக்கர் நிலப்பரப்பில் விளைந்த விற்பனை செய்ய முடியாத தடியங்காய்களை குளிர்பதன கிடங்கில் சேமிக்க முடிவு செய்தார். அதன்படி, சுமார் 6 டன் தடியங்காய்களை வடசேரி உழவர்சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் சேமித்துள்ளார்.

இந்த குளிர்பதன கிடங்கு சூரிய ஒளியில் இயங்குவதாகும். தடியங்காய்கள் சேமிப்பதற்கு ஏதுவாக தகுந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அமைத்து அதற்குரிய ஏற்பாடுகளை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கீதா மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியை லதா ஆகியோர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்