வீடுகள் தோறும் டோக்கன் வழங்கப்பட்டது: ரேஷன் கடைகளில் இன்று முதல் பொருட்கள் இலவசமாக வினியோகம் அதிகாரி தகவல்
குமரி மாவட்டத்தில் வீடுகள் தோறும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் இலவச பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரி கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வீடுகள் தோறும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் இலவச பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரி கூறினார்.
ரேஷன் பொருட்கள்
கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த நிலையில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் பெற வீடுகள் தோறும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த சில தினங்களாக நடந்தன. நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் டோக்கன் வினியோகம் நடந்தது.
கூடுதலாக 5 கிலோ அரிசி
இதனையடுத்து டோக்கன் வினியோகம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ரேஷன் பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு உத்தரவுப்படி குடும்பத்தில் நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசியும் வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 246 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இன்று முதல் வழங்குவது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் உத்தரவுபடி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசியை முழுமையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதை கணக்கில் வைத்து அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரிசி வழங்கப்படும். ஆனால் கூடுதல் அரிசியை மொத்தமாக வழங்காமல் இந்த மாதம் பாதியும், அடுத்த மாதம் பாதியும் என பிரித்து வழங்குவோம். மேலும் சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
சமூக இடைவெளி
கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு பொருட்களை நேரில் சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்றி நின்று ரேஷன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் காலை 100 பேர்களுக்கும், மாலை 100 பேர்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
அரிசி மூடைகள்
இதற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏற்கனவே அரிசி குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. தற்போது அந்த அரிசி மூடைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.