காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை பெங்களூரு நகரில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பேட்டி

பெங்களூரு நகரில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-03 23:45 GMT
பெங்களூரு, 

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு நகரில் 2-வது கட்ட ஊரடங்கு நாளை (அதாவது இன்று) முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்வு செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெங்களூரு நகரில் நாளை (இன்று) முதல் வாகன ஓட்டிகளிடம் பாஸ் கேட்கப்படாது. பெங்களூரு நகரில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை நகரில் நகைக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை எந்த கடைகளும் திறக்க அனுமதி கிடையாது. ஆஸ்பத்திரி, மருந்துக்கடைகள் மட்டும் திறந்திருக்கலாம். இது வருகிற 17-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது. இரவு 7 மணிக்கு பிறகு கடைகள் திறந்திருந்தாலும், தேவையில்லாமல் யாராவது சுற்றித்திரிந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரவு பணிக்கு செல்பவர்கள் பாஸ் வாங்கி வைத்திருக்க வேண்டும் அல்லது தங்கள் அலுவலக அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம்.

ஆட்சேபனை இல்லா சான்றிதழ்

பெங்களூரு நகரில் நாளை (இன்று) முதல் போக்குவரத்து விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, ஒரு வழிபாதையில் சென்றாலோ அபராதம் விதிக்கப்படும். பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், ராமநகர், சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய 5 மாவட்டங்களும் ஒரே மண்டலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ் வைத்திருக்க வேண்டும். இந்த 5 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் தனியாக பாஸ் வாங்கியிருக்க வேண்டும்.

பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மாநில அரசு வழங்கும் பாஸ் வைத்திருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்கினால் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் பாஸ் வைத்திருக்க வேண்டும். அந்த பாஸ், அந்தந்த மண்டல துணை போலீஸ் கமிஷனர்களிடம் வாங்கி கொள்ளலாம்.

22 மண்டலங்களை தவிர...

நடைபயிற்சி செல்பவர்கள் காலை 7 மணிக்கு பிறகு தான் செல்ல வேண்டும். பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 22 மண்டலங்களை தவிர மற்ற பகுதிகளில் மதுபானக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

மதுவாங்க செல்பவர்கள் முக கவசம் மற்றும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை பின்பற்றவில்லை என்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர போலீசாரின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரும் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம். வெளியே சுற்றுபவர்களிடம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்