திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சித்திரை பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சித்திரை பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2020-05-03 23:07 GMT
திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சித்திரை பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விவசாய பணிகள்

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களாகி விட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் விவசாய பணிகளுக்கு தளர்வு அளித்து இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை எற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு தொடர்ந்தாலும் பருவத்தில் பயிர் செய்ய வேண்டும் என்ற நோக்கில் விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி கரையோர பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி எள், உளுந்து ஆகிய பயிர்களை விதைத்திருந்தனர்.

சித்திரை பருவ நெல் சாகுபடி

சுக்காம்பார், கோவிலடி, திருச்சினம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. அடஞ்சூர், முல்லக்குடி, ஆற்காடு, இளங்காடு, வேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சித்திரை கார் எனப்படும் சித்திரை பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடவு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதை காண முடிகிறது.

கடுமையான வெயில் அடித்து வரும் நிலையிலும் விவசாயிகள் நாற்று பறிப்பு, நடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஊரடங்கு நேரத்தில் பணியாற்றி வரும் விவசாயிகளுக்கு சிறப்பு உதவி தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்