சேலத்தில் புதிதாக பணியில் சேர வந்த 86 பெண் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

சேலத்தில் புதிதாக பணியில் சேர வந்த 86 பெண் போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-05-03 23:15 GMT
சேலம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து மற்றும் உடல் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 8,538 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

மாநிலம் முழுவதும் உள்ள 35 காவலர் பயிற்சி பள்ளிகளில் புதிதாக தேர்வான இரண்டாம் நிலை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண் காவலர்களுக்கு தற்போதுள்ள பட்டாலியன்களில் உள்ள நிரந்தர பயிற்சி பள்ளிகளில் பயிற்சி அளிக்கவும், பெண் காவலர்களுக்கு மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பயிற்சி பள்ளிகளில் பயிற்சி தர தமிழக காவலர் பயிற்சிப்பள்ளி டி.ஜி.பி. கரன் சிங்கா உத்தரவிட்டிருந்தார்.

சேலம் மாநகரில் பெண் காவலர் பணிக்கு 16 பேரும், மாவட்டத்தில் பெண் காவலர் பணிக்கு 70 பேரும் என மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று முதல் சேலம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி தொடங்கியது.

இதன்படி சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிபட்டி பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை 86 போலீசார் பயிற்சி வகுப்புக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். பிறகு அனைவருக்கும் கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டது. இதன் பிறகு அனைவரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

பின்னர் 86 பேரும் சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தனர். இன்று (திங்கட் கிழமை) முதல் 86 பேருக்கும் ஒருவார காலத்திற்கு அடிப்படை பயிற்சி தரப்பட உள்ளது என சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான்சன் தெரிவித்தார். ஒரு வார கால பயிற்சி முடிந்ததும் பெண் போலீசார் அனைவரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேலத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆண் போலீசாருக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்