முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு: தென்காசி வெறிச்சோடியது - மக்கள் நடமாட்டம் இல்லை

முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் தென்காசி வெறிச்சோடியது.

Update: 2020-05-03 23:30 GMT
தென்காசி, 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராத அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதும், கொரோனாவின் தாக்கம் குறையாததால் நேற்றுடன் முடிவடையும் சூழலில் மீண்டும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்தார். மேலும், அந்த அறிவிப்பில் மருந்துக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படவேண்டும் என்றும், காலை 6 மணி முதல் 10 மணி வரை இறைச்சிக்கடைகள் திறந்திருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

முழு ஊரடங்கு அமல்

அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய 5 நகராட்சி பகுதிகள் மற்றும் மேலகரம், குற்றாலம், இலஞ்சி, புதூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், திருவேங்கடம், ராயகிரி, வாசுதேவநல்லூர், சிவகிரி, ஆழ்வார்குறிச்சி, ஆலங்குளம், சுரண்டை, கீழப்பாவூர், ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம் ஆகிய 18 பேரூராட்சி பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், டிரோன் கேமரா மூலம் போலீசார் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

மக்கள் நடமாட்டம் இல்லை

முழு ஊரடங்கால் மருந்துக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. காலை 6 மணி முதல் 10 மணி வரை இறைச்சி மற்றும் மீன் கடைகள் மட்டும் திறந்து இருந்தன. அந்த கடைகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் வந்து இறைச்சியை வாங்கிச்சென்றார்கள். எப்போதும் காலையில் பரபரப்பாக காணப்படும் தென்காசி ரெயில்வே மேம்பாலம் நேற்று முழு ஊரடங்கின் காரணமாக வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் முக்கிய வீதிகள் உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில வாகனங்களே சாலைகளில் சென்றன. அவற்றையும் போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்தவர்களை எச்சரித்தும், கொரோனா தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்பி வைத்தார்கள்.

மேலும் செய்திகள்