நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக தொற்று இல்லை: புளியங்குடியில் மேலும் 2 பேருக்கு கொரோனா
புளியங்குடியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
புளியங்குடி,
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமானதால் அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, புளியங்குடி ஊருக்குள் செல்லும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்களில் ஏற்கனவே 8 பேர் ஆஸ்பத்திரிகளில் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் புளியங்குடியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ளவர்களில் 24 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 3 பேர் தென்காசி மற்றும் வெளிமாவட்ட ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமும் நோய் தொற்று குறித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் நோய் தொற்று இல்லை. இதனால் புளியங்குடி மக்கள் நிம்மதியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் பெண் உள்பட 2 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
புளியங்குடி நகரசபை ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பது போன்ற தீவிர சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், மையங்களில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெல்லை-தூத்துக்குடி
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 57 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்களில் 5 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் வெளிமாவட்ட ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் நேற்றுடன் சேர்த்து கடந்த 10 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால், அந்த மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. அங்கு கடந்த 15 நாட்களாக புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.