போலீசாரின் பாதுகாப்பை கருதி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

போலீசாரின் பாதுகாப்பை கருதி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-03 01:42 GMT
ஆரல்வாய்மொழி, 

போலீசாரின் பாதுகாப்பை கருதி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

சோதனைச்சாவடி

குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. அதே சமயத்தில், வெளியூரில் இருந்து குமரிக்கு வாகனங்களில் வரும் நபர்களால் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் நிலவியது.

சென்னையில் கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாக இருப்பதாலும், அறிகுறியே இல்லாமல் அங்கு பரவுவதாலும், சென்னையில் இருந்து குமரிக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

மேலும் சிலர் காய்கறி உள்ளிட்ட வாகனங்களில் பதுங்கி வருவதாகவும் புகார் வந்தது.

இதனையடுத்து ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் ஈடுபட்டு வரும் போலீசார், காய்கறி வாகனங்களில் ஏறி, அதில் யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என சோதனை செய்து வந்தனர். அவ்வாறு வாகனங்களில் ஏறி சோதனை செய்யும் போது, போலீசாருக்கு தொற்று ஏற்படலாம் என்று கருதப்பட்டது.

கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

இதனை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நேற்றுமுன்தினம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு சென்று போலீசாரின் பணியை பார்வையிட்டார். மேலும், போலீசாரின் பாதுகாப்பை கருதி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்படி உடனடியாக கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி துரிதமாக நடந்து நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. அந்த கோபுரத்தில் ஏறி நின்றபடி வாகனங்களில் யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என போலீசார் சோதனை செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்