வெளிமாவட்டங்கள் மற்றும் கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வந்த 350 பேருக்கு கொரோனா பரிசோதனை

வெளிமாவட்டங்கள் மற்றும் கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வந்த 350 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு அவர்கள் அனைவரையும் கல்லூரிகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Update: 2020-05-02 22:18 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆகும். இவர்களில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் 27 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 24 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக இருந்தாலும் தற்போது 24 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதால் சிவப்பு மண்டலத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள்

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 4 பேரும் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரம், கூலி வேலை செய்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த பலருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பீதி காரணமாகவும், சென்னையில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பரவியுள்ளதன் காரணமாகவும் கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரம் மற்றும் கூலி வேலை செய்து வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தங்கியிருந்து வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 250 பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். அவர்களை காவல்துறை உதவியுடன் சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தினர்.

350 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த பலருக்கும் நோய் தொற்று பரவியுள்ளதாக வெளியான தகவலையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 250 பேரால் வேறு யாருக்கும் நோய் தொற்று பரவாமல் இருக்க அவர்கள் அனைவரையும் வேறு இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி திண்டிவனத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி, விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர், அரசூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகள் என மொத்தம் 4 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மையங்களில் 250 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதுதவிர பல்வேறு வெளிமாவட்டங்களை சேர்ந்த 100 பேர் விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மேற்கண்ட 4 மையங்களிலும் தனிமைப்படுத்தினர்.

கொரோனா பரிசோதனை

இவ்வாறு 4 கல்லூரி மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 350 பேரிடமும் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், கோயம்பேடு மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வந்த சுமார் 350 பேரை 4 கல்லூரி மையங்களில் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். இதன் முடிவுகள் வந்த பின்னரே யார், யாருக்கெல்லாம் நோய் தொற்று உள்ளது என்று தெரியவரும். அவ்வாறு நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கும், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்