‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: லாரி டிரைவர்களை சோதனைச்சாவடிகளிலேயே பரிசோதனை செய்ய ஏற்பாடு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

Update: 2020-05-02 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் கடைசியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 3 பேரில் இருவர் லாரி டிரைவர்கள். இவர்கள் சமீபத்தில் வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் ஆவர். இவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டாலும், வீடுகளில் தங்களை முறையாக தனிமைப்படுத்தி கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் நபர்கள் மூலம் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்பகுதிகளிலேயே முகாம் அமைத்து, கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் அவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ‘தினத்தந்தி’யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இந்த செய்தி எதிரொலியாக நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.பள்ளி, பச்சாம்பாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம், கொக்கராயன்பேட்டை, பள்ளிபாளையம் காவிரி பாலம், பரமத்திவேலூர் காவிரி மேம்பாலம், சோழ சிராமணி, மோகனூர்-வாங்கல் பாலம், வளையப்பட்டி, பவித்திரம், வெற்றிவிகாஸ் பள்ளி, திம்மநாயக்கன்பட்டி, பாலமடை, காளிப்பட்டி ஆகிய 14 சோதனைச்சாவடிகளின் அருகிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இனிவரும் காலங்களில் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரி டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சோதனைச்சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், பரிசோதனை செய்யப்படும் நபர்கள் 2 நாட்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்