லெப்பைக்குடிகாடு, அத்தியூரில் முழு ஊரடங்கு

லெப்பைக்குடிகாடு, அத்தியூரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Update: 2020-05-02 05:47 GMT
மங்களமேடு, 

லெப்பைக்குடிகாடு, அத்தியூரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 4 வயது சிறுவன், போலீஸ் ஏட்டு, பெண், தீயணைப்பு வீரர், கல்லூரி மாணவர் உள்பட மொத்தம் 7 பேர் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளார். மீதமுள்ள 6 பேரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த 32 வயதுடைய நிறைமாத கர்ப்பிணி பெண் கடந்த 27-ந் தேதி லெப்பைக்குடிகாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

இதேபோல் அத்தியூர் கீழ ராஜா தெருவை சேர்ந்தவரும், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியாற்றி வரும் 51 வயதுடைய ஆணும், அவர் பணியாற்றும் இடத்திலேயே கொரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார். இந்நிலையில் அவர்கள் 2 பேரின் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பியதில், பரிசோதனையின் முடிவில் நேற்று காலை அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

முழு ஊரடங்கு

இதனால் லெப்பைகுடிகாடு பேரூராட்சி மற்றும் அத்தியூர், துங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முழு ஊரடங்கையொட்டி லெப்பைக்குடிகாடு பேரூராட்சி மற்றும் அத்தியூர், துங்கபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் வழிமறித்து விசாரித்தனர். முழு ஊரடங்கு செய்யப்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் இரு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி, அவர்களை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும் போலீசார் ஹெலி கேமராவை பறக்கவிட்டு கண்காணித்தனர்.

தடை

முழு ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி மற்றும் அத்தியூர், துங்கபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வீட்டில் முடங்கிய பொதுமக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி தாயம், சீட்டு, கேரம் போர்டு உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தனர்.

முழு ஊரடங்கில் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, மளிகை கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்ததால், காய்கறிகள் மட்டும் சரக்கு வேனில் ஆங்காங்கே விற்கப்பட்டது. அதனை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி சென்றனர். இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் 14 நாட்களுக்கு வெளி நபர்கள் மேற்காணும் பகுதிகளுக்குள் செல்லவும், உள்ளூர் நபர்கள் வெளியில் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்