திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

கே.விகுப்பம் அருகே திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2020-05-02 05:33 GMT
கே.வி.குப்பம்,

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் அஞ்சுகம்நகரை சேர்ந்த தம்பதியர் கண்ணப்பசெட்டியார்-பத்மாவதி. இவர்களின் மகன் சங்கர் (வயது 45), வியாபாரி. இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

அதேபகுதியில் உள்ள இ.பி.காலனியைச் சேர்ந்த தம்பதியர் சாந்தகுமார்-சம்பூர்ணம். இவர்களின் மகள் மகாலட்சுமி (20). இவரும், சங்கரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். ஊரடங்கையொட்டி இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது.

நேற்று மதியம் 2.30 மணியளவில் கணவரின் வீட்டில் இருந்த மகாலட்சுமி, குளிப்பதற்காக துணியை எடுத்து வருவதாகக் கூறி விட்டு, ஒரு அறைக்குள் சென்று கதவை மூடி உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்கவில்லை.

தற்கொலை

சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்காததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மகாலட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை தூக்கில் இருந்து மீட்டு மோட்டார்சைக்கிளில் வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகாலட்சுமி இறந்து விட்டதாகக் கூறினர்.

இதுகுறித்து மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மகாலட்சுமியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்