ஆலங்குடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை மகனுக்கு திருமணம் செய்து பார்க்க முடியாததால் விபரீதம்

மகனுக்கு திருமணம் செய்து பார்க்க முடியாத ஏக்கத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-02 05:12 GMT
ஆலங்குடி, 

மகனுக்கு திருமணம் செய்து பார்க்க முடியாத ஏக்கத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி தற்கொலை

ஆலங்குடி அருகே வாரப்பூர் அடுத்த கரையப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60). விவசாயி. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் முருகேசன், சரவண பாண்டி ஆகிய 2 பேரும் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தனர். இதில் இளைய மகன் சரவண பாண்டி கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊருக்கு வந்து விட்டார். இந்நிலையில், முருகேசனுக்கு திருமணம் செய்து வைக்க ஊருக்கு வரச்சொல்லி, சின்னதம்பி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் வருவதாக இல்லை. இதனால் மூத்த மகன் இருக்கையில், இளைய மகனுக்கு திருமணம் செய்து வைக்கவும் வழியில்லை.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சின்னதம்பி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து வயலில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதம்பி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனுக்கு திருமணம் செய்து பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாராயம் காய்ச்சியவர் கைது

*இலுப்பூர் அருகே உள்ள காரைமேடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த முத்துசாமி என்பவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் 10 லிட்டர் சாராயம், 100 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். தப்பியோடிய சிதம்பரம், சேகர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணல் கடத்திய 4 பேர் கைது

*காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் இடையன்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், பொக்லைன் எந்திரத்தை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் டிராக்டரில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கடத்தி வந்த மேலத்தானியத்தை சேர்ந்த ராஜ்குமார், புதூரை சேர்ந்த சத்தியமூர்த்தி, பொக்லைன் எந்திர உரிமையாளர் ஜெய்சங்கர், டிரைவர் ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்து, டிராக்டர், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்