திருவண்ணாமலையில் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

திருவண்ணாமலையில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Update: 2020-05-02 05:06 GMT
திருவண்ணாமலை,

கொரோனா ஊரடங்கை மக்கள் முறையாகப் கடைப்பிடிக்கிறார்களா? எனப் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, தொடர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பலர் கொரோனா ஊரடங்கை மதிக்காமலும், எந்த ஒரு அச்சமுமின்றி சர்வ சாதாரணமாக மோட்டார்சைக்கிள்களில் வலம் வருகிறார்கள். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பரவல் வேகமாக உள்ளது. அங்கிருந்து பலர் சொந்த ஊருக்கு வருகிறார்கள். ஒருசிலர் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து பலர் சொந்த ஊருக்கு வருகின்றனர். மோட்டார்சைக்கிளில் வெளியே வருபவர்களை ஸ்மார்ட் காப் செயலி மூலமாக கண்டறிந்து, கைது செய்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்தப் பணிகள் நடந்தும் எந்தப் பயனும் இல்லை.

போலீசார் திணறல்

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பொதுமக்கள் நடமாட்டம் வழக்கத்தைப் போல் காணப்பட்டது. பஸ், ஆட்டோ, கார் ஆகியவை மட்டும் தான் ஓடவில்லை. ஆனால் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். மேலும் அவர்களை, போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

திருவண்ணாமலையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 713 வழக்குகள் பதிவு செய்து 713 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 695 மோட்டார் சைக்கிள்கள், 1 மூன்று சக்கர வாகனம், 5 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்