விற்பனைக்கு அனுப்ப முடியாததால் விவசாயிகள் கவலை; தோட்டங்களில் மலைபோல் குவிந்த தேங்காய்கள்
ஊரடங்கு காரணமாக விற்பனைக்கு அனுப்ப முடியாததால் தோட்டங்களில் தேங்காய்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
அச்சன்புதூர்,
‘கற்பக தரு‘ என்று அழைக்கப்படும் பனை மரத்தின் இனத்தைச் சேர்ந்த தென்னை மரமும் அடி முதல் நுனி வரையிலும் மக்களுக்கு எண்ணற்ற பயன்களை தருகிறது. தென்னை மரங்களில் இருந்து ஊட்டச்சத்து மிகுந்த இளநீர், தேங்காய் கிடைக்கிறது. தேங்காய்மட்டை நாரில் இருந்து பெறப்படும் தும்பு மூலம் கயிறு, தரைவிரிப்பு போன்றவை தயாரிக்கப்படுகிறது. தென்னை மர ஓலைகள் கூரை வேயவும், ஓலை ஈக்குகள் துடைப்பம் தயாரிக்கவும் பயன்படுகிறது. தென்னை மர கட்டைகளை கட்டுமான பணிகளுக்கும், விறகாகவும் பயன்படுத்துகின்றனர்.
பழங்காலத்தில் இருந்தே பல்வேறு நாடுகளிலும் மக்கள் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். தேங்காய் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழகத்தில் பொள்ளாச்சி, கம்பம் ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.
தென்னை மரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து, தேங்காய் மட்டைகளை தனியாக உறிக்கின்றனர். பின்னர் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை வெயிலில் காய வைத்து, எண்ணெய் தயாரிப்பதற்காக ஆலைகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர்.
மேலும் தேங்காய் மட்டைகளை கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
தேங்காய்கள் தேக்கம்
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் எண்ணெய் ஆலைகளும், கயிறு ஆலைகளும் மூடப்பட்டு உள்ளன. எனவே, காய வைத்த தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. மேலும், தோட்டங்களில் பறிக்கப்பட்ட தேங்காய்களும் மலைபோன்று குவிந்து கிடக்கின்றன. தேங்காய் மட்டைகளையும் கொள்முதல் செய்வதற்கு கயிறு ஆலைகள் முன்வரவில்லை.
இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேங்காய் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் தேங்காய் உற்பத்தியை நம்பியிருந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
நஷ்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஊரடங்குக்கு முன்பாக, காய வைத்த தேங்காய் பருப்புகள் ஒரு கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது எண்ணெய் ஆலைகள் இயங்காததால், தேங்காய் பருப்புகள் ஒரு கிலோ ரூ.98 ஆக விலை குறைந்து உள்ளது. இன்னும் அவற்றின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தேங்காய்களை விற்பனைக்கு அனுப்பாததால், தோட்டங்களிலேயே மலை போன்று குவிந்து கிடக்கிறது.
இதேபோன்று கயிறு ஆலைகளும் இயங்காததால், தேங்காய் மட்டைகளும் தேக்கம் அடைந்துள்ளன. எனவே, எண்ணெய் ஆலைகளையும், கயிறு ஆலைகளையும் மீண்டும் திறந்தால்தான் விவசாயிகளின் வாழ்வில் மீண்டும் வளம் பிறக்கும். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.