ஈரோட்டில் உள்ள அம்மா உணவகங்களில் உணவுக்காக சமூக இடைவெளியில் காத்திருந்த பொதுமக்கள்

ஈரோட்டில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்கள் உணவுக்காக சமூக இடைவெளி விட்டு காத்திருந்தனர்.

Update: 2020-05-01 23:00 GMT
ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சூரம்பட்டிவலசு, வ.உ.சி. பூங்கா, கொல்லம்பாளையம், சூளை, கருங்கல்பாளையம், அரசு ஆஸ்பத்திரி, மரப்பாலம், காந்திஜி ரோடு, ஆர்.என்.புதூர் உள்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதனால் ஓட்டல்கள், உணவகங்கள் போன்றவை மூடப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு உணவு மாலை 6.30 மணிக்கு வழங்கப்படுவது வழக்கம். 

இந்த நிலையில் ஈரோடு சூளை பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்குவதற்காக நேற்று மாலை 5.30 மணிக்கே ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு உணவுக்காக காத்திருந்தனர். பின்னர் 6.30 மணிக்கு அம்மா உணவகத்தில் உப்புமா வழங்கப்பட்டது. 

அதை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள் உண்டு பசியாறினர். சிலர் தங்களது வீடுகளில் உள்ள பெரியவர்கள், சிறுவர்களுக்கு உணவு வாங்கி அதை கூடைகளில் எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்