ராமேசுவரம் கோவில் தங்கும் விடுதியில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்
ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தன. இதை தடுக்க விடுதி சுற்று சுவரை உயர்த்தி கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல கடந்த 1 மாதத்திற்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டாலும், தினமும் 6 கால பூஜைகளும் வழக்கம் போல் நடந்து வருகிறது. இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான அக்னிதீர்த்த கடற்கரை எதிரில் உள்ள தங்கும் விடுதி வளாக பகுதியை சுத்தம் செய்யும் பணியில் கடந்த 2 நாட்களாக கோவிலின் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
வளாகத்தினுள் வளர்ந்திருந்த முட்புதர்களை வெட்டி அகற்றினர். அப்போது விடுதி வளாக பகுதியை சுற்றிலும் ஏராளமான காலி மதுபாட்டில்கள் பல இடங்களில் குவிந்து கிடந்தன. இதையடுத்து நேற்று தூய்மை பணியாளர்கள் அனைத்து மது பாட்டில்களையும் சேகரித்து வைத்தனர். அதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருப்பது தெரிந்தது.
அதனை குப்பை வாகனத்தில் ஏற்றி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி வளாகத்தினுள் மதுபாட்டில்கள் குவிந்து கிடந்ததை பார்த்து கோவில் அதிகாரிகளும், நகராட்சி பணியார்களும் அதிர்ச்சியடைந்தனர். ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு ராமேசுவரத்தில் திருட்டுத்தனமாக விற்கப்பட்ட மதுபாட்டிலை வாங்கிய பலர் கோவில் வளாக பகுதியில் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டிலை அங்கேயே வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோவிலின் தங்கும் விடுதி வளாக பகுதியினுள் அத்துமீறி நுழைந்து மது அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க விடுதி வளாகத்தின் சுற்று சுவரை மேலும் உயர்த்தி கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.