பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர், கொரோனா வைரஸ் காரணமாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் அவருடைய 28 வயது மனைவிக்கும் கொரோனா வைரஸ் உறுதியானதால் அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் தாயார், அவருடைய மைத்துனர், உறவினரின் 7 மற்றும் 9 வயதான 2 சிறுவர்கள் என மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் பல்லாவரம் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர்.
அந்த பகுதியில் வேறு யாருக்காவது கொரோனா உள்ளதா? என்பதை அறிய கொரோனா தொற்று கண்டறியும் வாகனம் அந்த பகுதியில் கொண்டுவரப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பெருங்களத்தூர் கண்ணன் அவென்யூ பகுதியிலும் இதுபோல் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஆயுதப்படை போலீஸ்காரர்
சென்னையை அடுத்த பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் 15 ஆயுதப்படை போலீசாருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இவருடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பல்லாவரம் தாலுகாவை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது.
காஞ்சீபுரம்
குன்றத்தூர், மேத்தா நகரைச் சேர்ந்த 45 வயதான ஒருவர், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள வார்டு அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
குன்றத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அவரது வீட்டில் இருக்கும் 8-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டு உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர்
மாங்காடு பகுதியை சேர்ந்த 56 வயதான சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாங்காட்டில் காய்கறி கடை நடத்தி வந்தவருக்கு கொரோனா உறுதியானது. தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆனது.
திருவள்ளூர்
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையின் முக்கிய கோவில் நகரங்களில் ஒன்றான திருவேற்காட்டில் இதுவரை ஒரு நபருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர். ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே இங்குள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டது. இதனால் வெளிநபர்கள் யாரும் ஊருக்குள் வரவில்லை. இங்கு இருப்பவர்களும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இதுவரை பாதிப்பு இல்லாமல் இருந்தது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் திருவேற்காட்டில் இருந்து கோயம்பேடு சென்றவர்களால் கொரோனா பரவிவிடுமோ என மக்கள் அச்சம் அடைந்தனர். அதன்படியே திருவேற்காட்டில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். உடனடியாக அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.