திருச்செங்கோட்டில்தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்: அமைச்சர்கள் தலைமையில் நடந்தது
திருச்செங்கோட்டில் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தலைமையில் நடந்தது.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில், மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, சாயப்பட்டறை, நூற்பாலைகள், துணிநெய்தல், சோகோ தயாரிக்கும் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழில்களை மேற்கொண்டுள்ள சங்கத்தினர், உரிமையாளர்கள் ஊரடங்கு உத்தரவினால் தங்கள் தொழிலின் தற்போதைய நிலையை விளக்கினார்கள். ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரணத்தொகை மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுத்தொகுப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:- வல்லரசு நாடுகளாலேயே கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்கள் மக்களை பாதுகாக்க இயலாத நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நோய்த்தொற்றினால் பாதிப்பு அதிகம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே மக்களின் உயிர்காக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு நடவடிக்கைக்கு தொழில் செய்வோர் ஒத்துழைப்பு தரவேண்டும். முதல்-அமைச்சர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிப்பு நீங்கிய பகுதிகளில் தொழில்களை தொடங்க சம்மந்தப்பட்ட தொழில்துறையினருடன் ஆலோசனை செய்து அறிக்கை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உங்கள் ஆலோசனைகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலகங்களில் தொழிலாளர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முககவசம் அணியவும், தங்கள் தொழிலகங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவதற்கு உரிய ஏற்பாடுகளையும், அதிக நபர்கள் தொட்டு புழங்கும் தொழில்களில் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பின்னர் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் உள்பட திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.