ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ்காரர், தீயணைப்பு வீரர் உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ்காரர், தீயணைப்பு வீரர் உள்பட 3 அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்களில் 10 பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ள 5 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் உள்பட 3 அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி அருகே 33 வயது பெண்ணுக்கும், பனைக்குளம் அருகே 29 வயது நபருக்கும், ராமநாதபுரத்தில் 30 வயது போலீஸ்காரருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் உச்சிப்புளி அருகே உள்ள பெண் டெங்கு தடுப்பு பணியாளராகவும், பனைக்குளம் அருகே உள்ள நபர் தீயணைப்பு நிலைய ஊழியராகவும், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் போக்குவரத்து போலீஸ்காரராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் 3 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்சு மூலம் அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வசித்த பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டு அவர்களுடன் தொடர்புடையவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தெருத்தெருவாக சென்று கிருமிநாசினி மருந்து தெளித்து நோய் பரவாமல் தடுத்த தீயணைப்பு நிலைய வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் பணியாற்றிய தீயணைப்பு அலுவலகம் முழுவதும் நேற்று காலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஒருபுறம் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வரும் நிலையில், நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்ட அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.