நிவாரண பொருட்கள் கிடைக்காததால் ஈரோட்டில் 2 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

நிவாரண பொருட்கள் கிடைக்காததால் ஈரோட்டில் 2 இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-04-30 23:15 GMT
ஈரோடு, 

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி.ரோடு மிட்டாய்காரர் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டிட தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதித்து, வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதில் ரேஷன் கார்டு உள்ளவர்கள், அரசின் நிவாரண தொகை மற்றும் உணவு பொருட்கள் வாங்கி உள்ளனர்.

ஆனால் ரேஷன் கார்டு இல்லாத 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், மேலும் ரேஷன் அரிசி தரமற்றதாக இருப்பதால் உணவுக்கு பயன்படுத்த முடியவில்லை எனக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாசில்தார் பரிமளா, வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘நாங்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள். கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் 35 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

நாங்கள் பசி பட்டினியோடு, தண்ணீரை குடித்து உயிர் வாழ்கிறோம். அம்மா உணவகத்திற்கு செல்லுங்கள் என அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் வீட்டில் உள்ள நடக்க முடியாத முதியவர்களை அழைத்துக்கொண்டு போய் அம்மா உணவகத்தில் சாப்பிட முடியவில்லை. அங்கு சென்றாலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டுமே நிவாரண தொகையும், உணவு பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ரேஷன் கார்டு இல்லாத எங்களை போன்றவர்களுக்கு, அரசு சார்பில் எந்தவித உதவி தொகையும் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் தாசில்தார் பரிமளா, கூறுகையில், ‘ரேஷன் கார்டு இல்லாதவர்கள் அனைவரும் உங்கள் பெயர், முகவரி, ஆதார் கார்டு எண் போன்றவற்றை எழுதி, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள். உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, உங்கள் பகுதிக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அம்மா உணவகத்தில் 3 வேளையும் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடுங்கள்.

ரேஷன் கடையில் இந்த மாதத்திற்கான பொருட்கள் கொடுக்கும் போது அனைத்தும் தரமானதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் தெரியப்படுத்துங்கள். தற்போது நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் அரசு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்று, ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாசில்தார் பரிமளா ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் நிவாரண பொருட்கள் முழுமையாக கிடைக்கவில்லை. குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அம்மா உணவகத்திலும் அனைவருக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. மறு சாப்பாடு கேட்டால் போட மறுக்கின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றாலும் போலீசார் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி எனக்கூறி வெளியே விட மறுக்கின்றனர். எனவே எங்களுக்கு தொடர்ந்து உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். ஈரோட்டில் நேற்று 2 இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்