கரூரில் அணில், முயல்களை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்ட 7 பேர் கைது முகநூலில் படங்களை பதிவிட்டதால் சிக்கினர்

கரூரில் அணில், முயல்களை வேட்டியாடி சமைத்து சாப்பிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முகநூலில் படங்களை பதிவிட்டதால் அவர்கள் சிக்கினர்.

Update: 2020-04-30 03:55 GMT
கரூர், 

கரூரில் அணில், முயல்களை வேட்டியாடி சமைத்து சாப்பிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முகநூலில் படங்களை பதிவிட்டதால் அவர்கள் சிக்கினர்.

முயல்-அணில் வேட்டை

கரூரில், முயல், அணில், காடை போன்றவற்றை வேட்டையாடி குவியலாக வைத்து, பின்னர் சமைத்து சாப்பிடுவது போன்ற படங்கள் ஒருவரது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இது வைரலானது. இது வனத்துறை மற்றும் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து முகநூலில் அந்த படத்தை பதிவேற்றம் செய்தது யார்? அந்த கும்பலில் உள்ளவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என வனத்துறை அதிகாரிகள், கரூர் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) மற்றும் அவரது நண்பர்கள் என தெரியவந்தது.

7 வாலிபர்கள் கைது

இதனையடுத்து, வனத்துறையினர் அங்கு சென்று சந்தோஷை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சந்தோஷூம் அவரது நண்பர்களும் வேட்டை நாய் மூலம் காட்டுப்பகுதியில் உள்ள அணில், முயல், காடை போன்றவற்றை வேட்டையாடி, அவற்றை அப்பகுதியில் உள்ள தனியார் இடத்தில் வைத்து சமைத்து சாப்பிட்டு கும்மாளமிட்டுள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து முகநூலில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் சந்தோஷ், அவரது நண்பர்களான மார்ட்டின் (23), தீனதயாளன் (23), சித்தார்த் (21), மணிகண்டன் (27), வீரக்குமார் (27), அஜித் (23) ஆகிய 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றமாகும். அவ்வாறு வேட்டையாடுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்