ஊரடங்கால் மரங்களிலேயே பழங்கள் அழுகுகின்றன: முந்திரி கொட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள்

ஊரடங்கால் முந்திரி கொட்டைகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-04-30 02:30 GMT
திசையன்விளை, 

ஊரடங்கால் முந்திரி கொட்டைகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

செம்மண் தேரி

செழுமை மிக்க செம்மண் நிறைந்த தேரிப்பகுதியில் நன்கு விளையக்கூடிய மரங்களில் முந்திரியும் ஒன்றாகும். நெல்லை மாவட்டம் திசையன்விளை, இடையன்குடி, குட்டம், உவரி, இடைச்சிவிளை, காரிகோவில், அழகியவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேரிப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு, நாலுமாவடி, நாசரேத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் தேரிப்பகுதி உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 25 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ள தேரிப்பகுதியில் 3 அடுக்குகளான வளமான மண் அமைந்துள்ளது. தரையின் மேல்பகுதியில் உள்ள முதல் அடுக்கு மண் 2 ஆயிரம் ஆண்டுகளும், 2-வது அடுக்கு மண் 5 ஆயிரம் ஆண்டுகளும், கடைசி அடுக்கு மண் 8 ஆயிரம் ஆண்டுகளும் பழமைவாய்ந்தது. மழைநீரை உறிஞ்சி தேக்கும் தன்மை கொண்ட தேரிப்பகுதியில் இலுமனைட், டைட்டானியம் ஆக்சைடு, லிக்னைட், தோரியம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்துள்ளன. தேரிப்பகுதியில் காற்று வீசும்போது, அங்குள்ள மண் மேடுகள் அடிக்கடி இடம் மாறுவதால், அங்கு செல்கிறவர்கள் திசையை அறிந்து மீண்டும் திரும்பி வருவதற்கு சிரமப்படுவார்கள்.

முந்திரி பயிர்

தேரிப்பகுதியில் வளர்க்கப்படும் முந்திரி மரக்கன்றுகள், 5 ஆண்டுகளில் இருந்து பழங்களை தருகிறது. இந்த பழத்தின் வெளிப்பகுதியில் இதய வடிவத்தைப் போன்று தலைகீழாக முந்திரி கொட்டைகள் காணப்படும். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் முந்திரி பழங்கள் சீசன் அமோகமாக இருக்கும். நன்கு பழுத்த முந்திரி பழங்களை பறித்து, அதன் கொட்டைகளை தனியாக சேகரித்து, வெயிலில் காய வைத்து, திசையன்விளை பஜாரில் உள்ள மொத்த கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

அங்கிருந்து வியாபாரிகள் முந்திரி கொட்டைகளை கொள்முதல் செய்து, அதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முந்திரி பருப்பு தொழிற்சாலைகளுக்கும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். தொழிற்சாலைகளில் முந்திரி கொட்டைகளை எந்திரங்களில் எரித்து, உடைத்து அதன் பருப்புகளை தனியாக சேகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். முந்திரி பருப்புகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஒரு கிலோ ரூ.1,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அடிமாட்டு விலைக்கு...

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் திசையன்விளை பஜாரில் உள்ள முந்திரி கொட்டை கொள்முதல் செய்யும் மொத்த கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் முந்திரி மரங்களில் இருந்து பழங்களை பறித்து, அதன் கொட்டைகளை சேகரித்து விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் மரங்களிலேயே முந்திரி பழங்களை பறிக்காமல் விட்டதால் அவை அழுகி வீணாகிறது.

எனினும் ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் முந்திரி கொட்டைகளை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று கருதி விவசாயிகள், முந்திரி பழங்களை பறித்து, அதன் கொட்டைகளை தனியாக சேகரித்து வெயிலில் காய வைத்து வருகின்றனர். எனினும் பெரும்பாலான விவசாயிகள் வருமானமின்றி தவிப்பதால், அதனை அறிந்த சில வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் முந்திரி கொட்டைகளை கொள்முதல் செய்கின்றனர்.

ரூ.70-க்கு கொள்முதல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தோல் நீக்காத முந்திரி கொட்டைகளை ஒரு கிலோ ரூ.150 வரையிலும் வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக, தொழிற்சாலைகள் திறக்கப்படாததாலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும், தோல் நீக்காத முந்திரி கொட்டைகளை ஒரு கிலோ ரூ.70-க்குதான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு குறைந்த விலைக்கு வாங்குவதால், நாங்கள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே, முந்திரி கொட்டைகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்து, தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும்.

இடையன்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு முந்திரி பருப்பு தொழிற்சாலை செயல்பட்டது. பின்னர் அதனை மூடி விட்டனர். எனவே, திசையன்விளை பகுதியில் மீண்டும் முந்திரி பருப்பு தொழிற்சாலை தொடங்கினால், விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்